Wednesday 12 April 2017

Caste Engine...

சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட
இரண்டு சிறுகதைகளைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.
1.முதல் கதை ஆண்டாள் பிரியதர்சினி எழுதியது.
கதையின் பெயர் ‘கழிவு’
கதைச்சுருக்கம் : சோமையா அந்த காலத்தில் எடுப்புக் கக்கூஸ் எனப்படும் மலம் அள்ளும் தொழிலைச் செய்தவர்.
அது பற்றிய விவரணைகளை வாசகர்கள் மனதில் படுமாறு ஆசிரியர் எழுதுகிறார்.
அவர் உடம்பில் எப்போதும் அடிக்கும் அந்த நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் மனைவி பிரிந்து போய்விடுகிறார்.
மகன் மட்டும் சோமையா கூட இருக்கிறான். அவனும் கொஞ்சநாளில் அப்பாவின் தொழில் பிடிக்காமல் ஒடிவிடுகிறான்.
வெளியூர் சென்று அமாவாசை என்றிருக்கும் அவன் பெயரை மாற்றி தனபால் என்று வைத்து அங்கே வெறு ஒரு ஜாதிப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இதற்கிடையில் சோமையா சொல்ல சொல்ல அவர் அனுபவங்களை மூர்த்தி என்பவன் எழுதி அந்த படைப்புக்கு அம்பதாயிரம் ரூபாய் பரிசு கிடைக்கிறது.
தனபால் எப்படியாவது அப்பாவுக்கு கிடைத்தப் பரிசை வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறான். பரிசு வந்ததும் அப்பாவை உலுக்கி எனக்குக் கொடு என்று கேட்டு அடித்து துன்புறுத்துகிறான்.
உடனே சோமையா ”நான் இந்தப் பணத்தை மூர்த்தி நடத்தும் ஸ்கூலுக்குதான் கொடுப்பேன். என்னை கவனிக்காத உனக்கு கொடுக்க மாட்டேன்” என்று சொல்லி விட மேலும் கீழ்தரமாக தனபால் திட்ட, தனபாலை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள். ஒரு கழிவாக வெளியே தனபாலை அனுப்புகிறார்கள்.
2.இரண்டாவது கதை ’கருக்கு’ பாமா எழுதியது
கதையின் ‘வயிறும் வாழ்க்கையும்’
ஒரு அரசுப் பள்ளிக்கூட டீச்சரின் பார்வையில் கதை விரிகிறது. ரமேஷ் என்ற தாழ்த்தபட்ட சாதி மாணவன் (ஐந்தாம் வகுப்பு) மேல் மோகன் என்னும் மாணவனின் அம்மா ஒரு குறை சொல்கிறாள்.
என் மகன் மோகனின் சாப்பாட்டை ரமேஷ் வாங்கி சாப்பிட்டு விடுகிறான் என்று. டீச்சர் ரமேஷிடம் நீ சத்துணவு வாங்கி சாப்பிட மாட்டாயா என்று கேட்க, ரமேஷ் அமைதியாய் இருக்கிறான். இன்னும் அதட்ட “நான் வாங்கவில்லை. மோகன் கொடுத்டான்” என்று சொல்ல, மோகன் “சாப்பிடும் போது பக்கத்துலேயே நின்னு தா தான்னு பாத்துகிட்டு இருக்கான் டீச்சர் “என்று சொல்ல, ரமேஷ் அமைதியாய் இருக்கிறான்.
இதில்லாமல் மோகன் இன்னொரு தகவலைச் சொல்கிறான். “ரமேஷ் சத்துணவு தட்டையே எடுத்துட்டு வரதில்ல டீச்சர் .அதுக்கு பதிலா சதீஷ்குமார் வீட்டுக்கு மத்யானம் போயிருவான்” என்று சொல்ல டீச்சர் ரமேஷிடன் ஏன் சதீஷ்குமார் வீட்டுக்கு போகிறாய் என்று கேட்க, சதீஷ் வீட்டில் மீதம் உள்ள சாப்பாட்டை கொடுப்பார்கள் என்றும், அதை வெளியே நின்றுதான் சாப்பிட வேண்டும் என்றும் சொல்கிறான்.
நீ ஏன் அப்படிப்பட்ட வீட்டுக்கு போகிறாய் என்று டீச்சர் கேட்க, “எனக்கு இது மாதிரி சாப்பாடு சாப்பிட பிடிக்கல டீச்சர்,கெட்டித் தயிர்சாதம் மாதிரி நல்ல சாப்பாடா சாப்பிடப் பிடிக்குது” என்கிறான். இன்னொரு மாணவி சந்தியா (தாழ்த்தபட்ட வகுப்பு) தன் வகுப்பு தலைவர் போஸ்டை கிருஷ்ணவேணி என்னும் பெண்ணுக்கு விட்டுக் கொடுக்கிறாள்.
சந்தியாவை அழைத்து டீச்சர் கேட்கும் போது “வேணி, எனக்கு மத்யானம் அவ கொண்டு வந்த சாப்பாட்டுல கொஞ்சம் தருவாளாம். நான் லீடராக விருப்பமில்லன்னு சொல்ல சொல்லிட்டா” . ஏன் அப்படி என்று டீச்சர் இன்னும் விசாரிக்க, ”வேணிக்கு ரொம்ப ஆசை அவ அம்மாகிட்ட சொல்லியிருக்கா, அவ அம்மாதான் இந்த ஐடியாவ அவளுக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்று சந்தியா சொல்கிறாள்.
டீச்சர் இதைக் கேட்டு கொதித்து தலைமை ஆசிரியரிடம் சொல்லும் போது “விடுங்க டீச்சர் படிக்கனும்னு வர்ற குழந்தைங்க லீடரா இருக்கட்டும். சாப்பாட்டுக்குன்னு ஸ்கூலுக்கு வர்ற குழந்தைகள் அது பாட்டுக்கு இருக்கட்டும்” என்று பேச,
டீச்சர் இப்படி அனைவரும் ஜாதிவெறியுடன் இருக்கிறார்களே என்று மனதுக்குள் கொதிப்பதாக கதை முடிகிறது.
இந்த இரண்டு கதைகளும் சமூகநீதியை களமாக கொண்டு எழுத வேண்டும் என்று எழுதப்பட்ட கதைகள்தாம்.
ஆண்டாள் பிரியதரிசினிக்கு மலம் அள்ளும் களம் கிடைத்திருக்கிறது. அதை அவர் நன்றாகவே விவரித்திருக்கிறார். மலம் அள்ளுவதால் சோமையாவுக்கு வரும் துன்பம் அனைத்தையும் விவரித்திருக்கிறார்.
ஆனால் பின்னால் போக போக அதை அப்பா மகன் கதையாக்கி விடுகிறார். அப்பாவை வெறுக்கும் மகன். அதாவது ’சம்சாரம் அது மின்சாரம்’ விசு-ரகுவரன் மாதிரி ஆக்கிவிடுகிறார். அந்தக் கதையில் எங்கும் மலம் அள்ளும் தொழில் என்பது சோமையாவின் மேல் சுமத்தப்பட்ட, திணிக்கப்பட்ட தொழிலாக ஆண்டாள் பிரியதரினி பார்க்கவில்லை.
சோமையா அப்படி பிறந்து விட்டார். அதனால் அவர் மலம் அள்ளுகிறார் என்ற முன்கருத்து ஆசிரியருக்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. அது பற்றிய கொதிப்பு வாக்கியங்கள் வேண்டாம். ஒரு சிந்தனை வாக்கியம் கூடவா ஆண்டாள் பிரியதரிசினியால்
எழுத முடியாது.
தனபால் என்ற அமாவாசை தன் அப்பா சோமையாவின் நாற்றம் பொறுக்காமல் ஒடிப்போனதை ஆண்டாள் மாபெரும் குற்றமாக பார்க்கிறார். அது சாதரணமான உணர்ச்சி. நம் அப்பாவோ அம்மாவோ பெற்றெடுத்த மகளோ மகனோ இரண்டு நாற்றம் பிடித்த குசுக்களை தொடர்ச்சியாக விட்டாலே நாம் அனைவரும் அவர் மீது சொல்ல முடியாது கோபம் கொள்வோம்.
அதே கோபம் தனபாலுக்கும் இருந்திருக்கலாம்.
அங்கேதான் ஆண்டாள் தந்திரம் செய்கிறார்.
தனபாலை மேலும் மேலும் வில்லனாக சித்தரிக்கிறார். அந்த சித்தரிப்பை அந்த கேரக்டர் மீது திணிக்கிறார். தனபால் மனைவியின் ஒழுக்கத்தை சந்தேகிப்பவன், விஷ வார்த்தை பேசுபவன், அப்பாவை மதிக்காதவன். அடிப்பவன். இப்படியாக வலிந்து சித்தரிக்கிறார்.
சில இடங்களில் ஆண்டாள் பிரியதரிசிணியின் மனதில் உள்ள எண்ணம் வெளியே தெரிகிறதோ என்ற சந்தேகம் வருகிறது. குறிப்பாக இப்படி ஒரு வசனம் வருகிறது.
மூர்த்தி சோமையாவின் மகன் தனபாலிடம் கேட்கிறான் // நீ என்ன வேலை செய்ற ஹோட்டல் சானிட்டரி மெயிண்டனஸ்தான. பேருதான் மாறி இருக்கு. அதுவும் உங்கப்பா செய்த வேலைதான. உங்க பொண்ணுகளாவது உங்கள உதறிட்டு போயிராம பாத்துக்கோங்க //
அதாவது சோமையாவின் மகன் தனபாலும் சோமையா செய்யும் தொழில் செய்ய வேண்டியதிருக்கிறது என்ற கோணம் ஆண்டாள் பிரியதரிசினியை வருத்தமடையவில்லை.
ஆனால் சோமையாவை தனபால் அவமானப்படுத்தியதால், தனபாலை அவன் பெண் குழந்தைகள் அவமானப்படுத்தக் கூடும் என்று நினைத்து இன்புறுகிறார்.
ஆக ஆண்டாளுக்கு ஒரு நல்ல பிடிமானம் உள்ள கதை கிடைத்தும் அதை ஒரு தந்தை மகன் உறவுக் கதையாக காமா சோமா என்று எழுதி விகடனிலும் பிரசுரித்து இருக்கிறார்.
கருக்கு பாமா எழுதிய கதைக்கு வருவோம்.
கதையில் பாமா எடுத்திருக்கும் டாப்பிக்கே புதுமையானது.
தலித் இலக்கியம் என்றாலே களம் சார்ந்த அதீதமாக பரிதாபம் வரும்படியாக சொல்வது என்று மட்டும் சிந்திக்காமல் உண்மையில் நடக்கும் ஒரு விஷயத்தை அப்படியே சொல்கிறார்.
சத்துணவு சாப்பிடும் ஏழை மாணவர்களுக்கு உள்ள உணர்வு. அது மட்டுமில்லாமல் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் ஏழைகள் மட்டுமில்லாமல் தாழ்த்தபட்ட மாணவர்களாகவும்( பெரும்பான்மை) இருப்பதை கதையின் போக்கில் படம்பிடித்துக் காட்டுகிறார்.
அதில்லாமல் புலன்களுக்கும் தன்மானத்துக்கும், உரிமைக்கும் நடக்கும் போராட்டத்தை அழகாக காட்டுகிறார்.
சிறுவர்களின் இதே வீக்னஸைதான் (யதார்த்தில் எந்த மனிதனுக்கும் வரும் இயல்பான புலன் சார்ந்த வீக்னஸ்தான். வாழ்க்கை போராட்டம் சார்ந்த வீக்னஸ்தான்) பெரியவர்களிடம் வேறுவிதமாக பயன்படுத்தி தலித் அல்லாத ஜாதியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறார்.
இதில் பாருங்கள் பாமாவு சொல்லும் முதல் கதை மிக இயல்பாக இருக்கிறது. ரமேஷ் மோகனிடம் தயிர்சாதம் வாங்கிசாப்பிடுவது, சதீஷ் வீட்டுக்கு வெளியே நின்று மிச்சத்தை வாங்கி உண்பது இயல்பாக வந்திருக்கிறது.
ஆனால் சந்தியா தன் கிளாஸ் லீடர் பதவியை உணவுக்காக விட்டுக் கொடுப்பது நாடகத்தனமாக ஆகிவிடுகிறது.
ஆனால் பாமா அவர் சொல்ல வரும் கருத்தை தெளிவாக சொல்ல அதைச் சேர்த்திருப்பதால் அது கதையை பாதிக்கவில்லை. சிறப்பாக அமையவே துணை செய்கிறது.
ஆண்டாள் பிரியதரிசிணி நல்லதொரு தொடக்கத்தை ஒருமாதிரி வீணடித்து எந்த பார்வையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறார்.
சூழ்நிலையையும் காட்சிகளையும் நோக்கமில்லாமல் எழுதும் போது, ஏதோ ஒரு கவனத்தோடு எழுதும் போது அங்கே இலக்கியமாக அதிகம் விவரிக்க வேண்டிய அவசியம் வருகிறது. அங்கேயும் ஆண்டாள் தவறிவிடுவதால் அது ஒரு சுமாரான சிறுகதையாகிவிடுகிறது.
பாமாவோ நல்லதொரு தொடக்கத்தை இன்னொரு கதையையும் சேர்த்து சொல்லி அவர் சொல்ல வந்த நோகத்தைக் கருத்தை வாசகர் மனதில் பதிய வைத்துவிடுகிறார். மேலும் அந்த கதையின் சூழ்நிலையே ஒரு இலக்கியம்தான்.
வாசகன் அதை நினைத்துப் பார்த்தாலே இலக்கிய அனுபவத்துக்குப் போய்விடுவான். அதோடு சேர்ந்து இந்த புலன் தடுமாற்றத்தையும் அதை மற்றவர்கள் அலெட்சியமாக பேசும் அவலத்தையும் சொல்வதையும் சாதரணமாக விவரிக்கும் போது, இது வாசகனுக்கு சமுதாயம் பற்றிய இன்னும் ஒரு முக்கிய பார்வையைக் கொடுத்து முக்கியமான சிறுகதையாகிவிடுகிறது.
ஏன் ஆண்டாள் பிரியதரிசினியால் இந்தக் கதையை இப்படி சாதரணமாக கொண்டு போக முடிந்தது?
ஏன் பாமாவால் இந்தக் கதையை இப்படி நன்றாக கொண்டு போக முடிந்தது.
அனுபவம் என்றுதான் முதலில் சொல்வோம். ஆண்டாளுக்கு அந்த அனுபவம் எதுவும் கிட்டவில்லை. ஆனால் பாமாவோ அந்த சூழ்நிலையில் வளர்ந்ததால் அவருக்கு அனுபவம் இருக்கும். அதனால் நன்றாக எழுதியிருக்கிறார் என்று சொல்வோம்.
இல்லை என்பேன். இதை மறுக்க விரும்புகிறேன்.
வாசிப்பும் தைரியமும்தான் வித்தியாசம் என்பேன்.
பாமாவுக்கு நிச்சயமாக அம்பேத்கர் பற்றியும், சமூக நீதி பற்றியும் சரியானதொரு வாசிப்பு இருந்திருக்கும்.
அதனாலேயே அவரால் சாதரண ஒரு சம்பவத்தை உற்று கவனித்து பின்னால் ஒளிந்திருக்கும் சாதிவெறியை கண்டுபிடிக்க முடிந்தது. மேலும் அதை எடுத்துரைக்கும் தைரியமும் அவருக்கு இருந்தது. இது மூன்றாவது ஒரு ஆள் பிரச்சனை அல்ல. என் பிரச்சனை. இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
இதை நான் சொல்வதால் யார் என்ன வசதியின்மையை உணர்ந்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் இப்படித்தான் என்ற உறுதி இருக்கிறது. பாமாவுக்கு எந்த இந்துத்துவ நண்பர்களையும் வருத்தமுறச் செய்கிறோமே என்ற பிரச்சனை இல்லை.
ஆனால் ஆண்டாள் பிரியதரிசினிக்கோ அது இல்லை. அவருக்கு அம்பேத்கர் வாசிப்பும் புரிதலும் இல்லை. சமூகநீதி பற்றிய தெளிவான பார்வையும் இல்லை.
தலித்கள் பிரச்சனையை வெறும் பரிதாபம் மற்றும் கருணை கொண்டு அனுகும் ஒரு சராசரி இந்தியப் பெண்ணாக மட்டும்தான் அவர் இருக்கிறார்.
சாதியின்தன்மை என்ன? அந்த இயந்திரம் எப்படி செயல்படுகிறது? இது பற்றியெல்லாம் ஆண்டாளுக்கு சுத்தமாக தெரியவில்லை என்று அவர் கதையைப் படிக்கும் போது தெரிகிறது.
அப்படி அவருக்கு வாசிப்பின் மூலம் தெரிந்தாலும் அதை வெளியே உரைக்கும் தைரியமும் அவருக்கு இல்லை.
அப்படி செய்யும் பட்சத்தில் அது அவரை சார்ந்த பலருக்கு வசதிக்குறைவாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆண்டாள் காந்தியையும், பாரதியாரையும் படிக்கும் போது கொஞ்சம் அம்பேத்கரையும் பெரியாரையும் படித்திருந்தால் இச்சிறுகதையை இப்படி எழுதியிருக்க மாட்டார்.
ஆண்டாள் எழுதிய கதை ஆனந்தவிகடனில் சிறுகதையாக வந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
அதாவது போலித்தனமாக சமூகநீதிப் பேசுவதை பிரசுரம் செய்வது விகடனின் அப்போதைய கணக்காக இருந்திருக்கலாம்.
அதாவது மலம் அள்ளும் கதையை சொன்னாற்போலும் இருக்க வேண்டும். ஆனால் அது சாதி இயந்திரத்தைப் பற்றி பேசக் கூடாது. மலம் அள்ளும் சோமையா பற்றி அனைவரும் பரிதாபப்பட்டு கண்ணீர் சிந்த வேண்டும் ( ஒகே நாங்க விகடன் குருப்ஸ் சமூகநீதி பேசிவிட்டோம்)
ஆனால் அதன் மூலக் காரணமான சாதி இயந்திரம் பற்றி பேசக் கூடாது ( ஒகே நாங்க விகடன் எங்க இந்துத்துவா ஆட்களையும் திருப்தி செய்து விட்டோம்)
இப்பதிவை நான் விகடனை குறை சொல்ல மட்டும் எழுதவில்லை.
நாம் அனைவருக்கும் இது பொருந்தும்.
சும்மா சாதிக் கொடுமை என்று ஒரு அவல நிகழ்வைப் பார்த்து கண்ணீர் வடித்து பரிதாபம், கருணை, வாஞ்சை தளத்தில் திரிந்துவிட்டு செல்வதால் சமூகநீதி ஏற்பட்டுவிடப் போவதில்லை.
சாதி என்பது என்ன?
அது எதில் இருந்து வருகிறது?
சாதி இயந்திரம் எப்படி வேலை செய்கிறது?
அது எப்படி தன்னைத்தானே மக்களின் சாதி வெறி மூலம் காத்துக் கொள்கிறது.?
மக்கள் ஏன் சாதி வெறி கொள்கிறார்கள்?
அதன் பின்னால் உள்ள மனநிலை என்ன ? மதத்துக்கு ஜாதிக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது?
இதையெல்லாம் உள்ளே உள்ளே போய் ஆராய்ந்து பார்க்கும் தைரியமும் பக்குவமும் வேண்டும்.
இந்தியாவுக்கே உரிய பிரத்யோக மானுடவியல் பார்வை தேவைப்படுகிறது.
அதைப் புரிந்து கொள்ள பெரியாரையும் அம்பேத்கரையும் விடாது படித்தல் வேண்டும்.
அப்போதுதான் Sharp ஆக யார் சமூகநீதி பேசுகிறார்கள்.
ஊரை ஏமாற்ற யார் சமூகநீதி பேசுகிறார்கள்.
சமூக நீதிக்கு தலையையும்,
சாதி ரசிகர்களுக்கு வாலையும் காட்டும்
போலி விலாங்கு மீன்கள் யார் என்று
அடையாளம் கொண்டு கொள்ள முடியும்.

Thursday 16 March 2017

கருந்துளையும் தோசையும்...

கருந்துளை என்ற Black hole பற்றி எனக்கு அதிகம் தெரியாது.
அதற்கு ஈர்ப்பு சக்தி மிக அதிகம் ஒளியைக் கூட தன்னுள் இழுத்துக் கொள்ளும். வெளியே விடாது. பெரிய பொருட்களைக் கூட உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும் என்று நினைத்து வைத்திருக்கிறேன். தெள்ளத் தெளிவாக கருந்துளைப் பற்றி தெரியாது.
”எங்க இருக்கீங்க” மனைவியிடம் இருந்து போன்.
“இதோ பக்கத்துல வந்துட்டேன். 30 நிமிசத்துல வந்துருவேன்” என்றேன்.
எனக்கு அதிகமான மரணதண்டனைக் கருணை மனுக்களை நிராகரித்த கருணாமூர்த்தி, நம் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்சி சென்னையில் ரவுண்டடிக்க வந்திருக்கிறார் என்று தெரியாது.
அதற்காக ரோட்டின் வாகனங்களை நிறுத்த என் பஸ்ஸும் நிற்க நேரமாகியது.நினைத்ததை விட ஒரு மணி நேரம் அதிகமாக வீடு போய் சேர்ந்தேன். மனைவி சோர்வுடன் படுத்திருந்தார்.
“வெங்காயச் சட்னி வெச்சி, தோசை சுடனும்னு நினைச்சேன். திடீருன்னு சோர்வா இருந்துச்சு. படுத்துட்டேன்” என்றார்.
நான் லேட்டாக வருவது பற்றி கோபப்படாமல் சோர்வாக கட்டிலில் படுத்திருந்தது பார்த்ததும் மனம் ஒருமாதிரி பாசமாக ஆகிவிட்டது.
“அய்யயோ பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குதா பாப்போம்” என்று தொட்டுப் பார்த்தேன். காய்ச்சல் இல்ல.
தொடர்ந்தேன்
“இரு நா தோசை சுட்டு எடுத்துட்டு வரேன்”
“தோசைச் சுட்டு இட்லிப் பொடி வெச்சி சாப்பிடுக்கலாம்” இது மனைவி.
கை மட்டும் கழுவிவிட்டு கிச்சனுக்குள் போனேன்.
தோசை சுடலாம் என்று மாவை பிரிட்ஜிலிருந்து எடுத்து வெளியே வைத்தேன்.
அப்போதுதான் நினைத்தேன்.
நான் என்றாவது தோசை உணவு தயாரித்தால் மட்டும் சைட் டிஷ் சிம்பிளாக இருக்கிறது. நேற்று வைத்த குழம்பு, தக்காளி தொக்கு இருக்கும். தோசை சுட்டு கொடுப்பேன்.
இல்லாவிட்டால் இட்லிப் பொடி நல்லெண்ணெய்தான்.
நான் ஏன் நல்ல சைட் டிஷ் வைக்காமல் இருக்கிறேன் என்று தோன்றியது.
சரி மனைவி விரும்பியவாறு வெங்காயச் சட்னியே செய்துவிடுவோம் என்று நினைத்தேன்.
வெங்காயச் சட்னி செய்முறைய ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கும் மனைவியிடம் போய் கேட்க முடியாது.
என்னத்தடா வெங்காயச் சட்னி, பெரிய மாயமா மந்திரமா? நாம செய்வோம் என்று நினைத்து, இரண்டு பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொண்டேன். இரண்டு சிறிய தக்காளியை எடுத்துக் கொண்டேன். நறுக்கிக் கொண்டேன். பச்சைமிளகாய் இரண்டு எடுத்துக் கொண்டேன்.
அதையெல்லாம் ஆயில் விட்டு வதக்கினேன். ஒரளவுக்கு வதங்கிய பிறகு சிறிய மிக்சி ஜாரை எடுத்து அந்த வதக்கலை உள்ளே போட்டேன்.
பாதி அளவுதான் அந்த ஜாருக்குள் போனது. சரி என்று அரைத்தேன். வெங்காயச் சட்னிக்கு ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும் போல் தெரிகிறது. நான் மையாக அரைத்து விட்டேன்.
அதையெடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டிவிட்டு, மீதம் உள்ள வதக்கலை விட்டு அரைத்தேன்.இப்போது அரைபட்ட இரண்டும் அளவில் சிறியதாகிவிட, இன்னும் கொஞ்சம் உப்பு போட்டு அரைத்துவிடலாம் என்று சேர்த்து அரைக்கும் போது மூடியை சரியாக மூட மறந்துவிட்டேன்.
சர்ர்ர்ர்ர்ர்
வெங்காயச் சட்னி தெறித்து என் சட்டையில் விழுந்து ஒட்டிக் கொண்டது.
நல்லவேளையாக கண்ணில் விழவில்லை. இதற்கு முன்பு சப்போட்டா ஜூஸ் செய்யும் போது இப்படி நடந்திருக்கிறது. அந்த அனுபவம் இருந்த பின்னும் அதே மாதிரி ஒரு தவறு.
சட்டை முழுவதும் சட்னி,
மிக்ஸி முழுவதும் சட்னி.
அப்படியே பதட்டத்திலும் எரிச்சலிலும் சோர்வு வந்தது. சரி இப்போது சோர்ந்தால் வேலைக்காகது என்று நினைக்கும் போது பின்னால் இருந்து ஒஹோ என்றொரு குரல் கேட்டது. அது என் மகள்தான்.
”சரி சரி இத சொல்லிராத அம்மாகிட்ட. நா இப்ப க்ளீன் பண்ணிருவேன்” என்று சொல்லி முடிக்குமுன் மனைவியிடம் சொல்ல பெட்ரூம் சென்று விட்டாள்.
சட்டையைக் கழட்டி பாத்ரூமில் ஊற வைத்துவிட்டு, மறுபடி மிக்சியைத் துடைத்து, மீதமிருக்கும் சட்னி போன்ற அக்கலவையை எடுத்து வைத்து, தோசைச் சுடப் போனேன்.
நல்லவேளையாக தோசை சரியாக வந்தது. வடிவமாகவும் வந்தது.
ஒரு தோசையைச் சுட்டு தட்டில் வைத்து வெங்காயச் சட்னியை வைத்தும் இட்லிப் பொடியையும் வைத்து மனைவியிடம் நீட்டினேன்.
“வெங்காயச் சட்னியை மையா அரைக்ககூடாது. ஒண்ணு ரெண்டாத்தான் அரைக்கனும். அவ வந்து சொல்றதுக்கு முன்னாடி மிக்சி சவுண்ட வெச்சே நான் கண்டுபிடிச்சிட்டேன்”என்றார்.
இருவரும் சிரித்தோம்.
மூன்று தோசை மனைவிக்கு. எனக்கும் மகளுக்கும் சேர்த்து நாலு தோசை.
அந்த நான்காவது தோசை அதாவது மொத்தத்தில் ஏழாவது தோசை சரியாக வரவில்லை.
அதாவது வட்டமாக மாவை ஊற்றினேன்.
ஊற்றி கரண்டியை உள்ளே விட்டுப் புரட்டிப் போட நினைத்தால் உள்ளே விடும் போது இடம் கொடுக்காமல் தோசையின் கரை சுருங்க ஆரம்பித்தது.
மேலும் மேலும் கரண்டி போக போக தோசை சுருங்கிக் கொண்டே போனது.
குறிப்பிட்ட கட்டத்தில் தோசை சுருங்கி சுருங்கி காணாமல் போய்விடுமோ என்னும் அளவுக்கு சுருங்கியது.
தோசையின் நடுவே இருக்கும் ஏதோ ஒரு அதிகமான ஈர்ப்பு சக்தி தோசையின் கரைகளை இழுத்து, சுருங்க வைத்து, தோசையையே மறைத்து விடுமோ என்று நினைத்தேன்.
இது ஒரு கருந்துளை (Black hole) தோசை என்று நினைத்தேன்.
குளிக்க பாத்ரூம் சென்ற போது அந்த Black hole தோசை சுடும் போது கரண்டியை வைத்தது மாதிரி கையால் செய்து பார்த்தேன்.
சிரிப்பாய் வந்தது. சிரித்துக் கொண்டேன்.
சீக்கிரம் பிளாக் ஹோல் பற்றி கசடற கற்றுத் தெளிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
வெந்நீர் உடலில் பரவ மனம் திருப்தியாக இருந்தது

கதைச்சுருக்கம்

கதைச்சுருக்கம் சொல்வதை ஆங்கிலத்தில் Quintessence என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
Quintessence என்றால் ஒரு விஷயத்தின் எஸன்ஸ் ஆகும்.
என்னப் பொறுத்தவரை கதைச்சுருக்கம் சொல்வது என்பதும் ஒரு கலைதான். ஒரு கதையின் ஜீவன் போகாமல் அதை சுருங்கச் சொல்வது என்பது கலைதான். சிலர் சினிமா பார்த்துவிட்டு கதை சொன்னால் நமக்கு அதிகம் பிடிக்கும்.
அவர்கள் சொல்லும் விதம் அவ்வளவு நன்றாக இருக்கும். கதைச்சுருக்கம் என்று பேசும் போது எனக்கு எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்கள் நினைவு வரும்.
ஏனென்றால் ”விமலாதித்த மாமல்லன் அவர்கள்” இந்தக் கதைச்சுருக்கம் சொல்வதை எப்போதும் எதிர்த்தே வருவார்.
கதைச்சுருக்கம் பாவம் அப்படி செய்யக்கூடாது. அப்படி செய்யவே கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
நானும் நினைப்பேன். “பரவாயில்லையே ”விமலாத்தித்த மாமல்லன் அவர்கள்” அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதைத்தான் விரும்பவில்லை. ஆனால் மூலப்படைப்பாளிகள் படைப்புகளின் மேல் பாசமாக இருக்கிறாரே என்று நினைத்தேன்.
ஒரு மனிதன் எவ்வளவுதான் கீழ்மையாக இருந்தாலும் ஏதாவது நல்ல குணம், நல்ல அக்கறை இருக்கும்.
அது மாதிரி ‘விமலாதித்த மாமல்லன் அவர்கள்” எவ்வளவுதான் கீழ்மையான, மொக்கையான குணத்தைக் கொண்டிருந்தாலும் இந்தக் கதைச்சுருக்க விஷயத்தில் ஒரு நல்லப் பண்பை வைத்திருக்கிறாரே என்று நினைத்தேன்.
ஆனால் சூழ்நிலைப் பாருங்கள் ஒருவரை ஒரு விஷயத்தில் நல்லத் தன்மை உடையவராக நினைத்து வைத்திருப்போம். ஆனால் அவரே அதைக் கெடுத்துக் கொள்வார். அது மாதிரி “விமலாதித்த மாமல்லன் அவர்கள்” தங்கள் கதைச்சுருக்க எதிர்ப்பு நல்லப் பண்பை (?) கெடுத்துக் கொண்டார்.
விகடனின் இலக்கிய இதழான தடம் இதழில் ”விமலாதித்த மாமல்லன் அவர்கள்” சென்னையில் நடந்த உலகத் திரைப்பட விழா பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
நானும் சரி படித்துப் பார்ப்போமே என்று படித்தேன்.
படித்தால் கட்டுரையில் ஒரு சுக்கும் இல்லை. மறுபடியும் ஒருதடவைப் படித்தேன். அவர் பார்த்த திரைப்படங்களின் கதைச்சுருக்கத்தை எழுதி வைத்திருந்தார்.
ஆஹா அந்தோணி.. ஊரெல்லாம் கதைச்சுருக்கம் தவறு தவறு என்று சொன்ன ’விமலாதித்த மாமல்லன் அவர்கள்’ இப்போது ’தடம்’ ஒருவார்த்தைக் கேட்டுக் கொண்டவுடன் சடாரென்று இறங்கிவிட்டாரே என்று தோன்றியது. அவர் கொள்கையை விட்டுவிட்டாரே என்று தோன்றியது.
அப்போதுதான் இன்னொரு எழுத்தாளர் ’விமலாதித்த மாமல்லன் அவர்கள்’ பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.
என்ன சொன்னார் “விமலாதித்த மாமல்லன்னுங்கிறவரு நீங்க நினைக்கிறது மாதிரி பத்திரிக்கைக்காரங்ககிட்ட தன் கொள்கைக்காக கறாரா நடக்குற ஆசாமி கிடையாது. அவர் ஊடகக் நண்பர்களிடம் ரொம்ப அன்பாகத்தான் நடந்து கொள்வார். காரியமான ஒரு எழுத்தாளர்” என்றார்.
தடம் இதழில் அவர் எழுதிய திரைப்படங்களின் கதைச்சுருக்கத்தைப் பார்க்கும் போது அவரைப் பற்றிக் கேள்விப்பட்டது சரிதான் என்று தோன்றியது. கதைச்சுருக்கமே தவறு என்பவர் விழுந்து விழுந்த கதைச்சுருக்கம் எழுதியிருக்கிறாரே.
சரி அந்தக் கதைச்சுருக்கமாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று பார்த்தால் பகவானே சுத்த போர். அந்த எழுத்தில் ஒரு ஜீவன் இல்லை.
முகநூலில் இதைவிட பல 20 வயது இளைஞர்கள் நல்ல
கிரியேட்டிவாக கதைச்சுருக்கத்தை எழுதுவார்கள்.
நான் கறாரான இலக்கியவாதி இலக்கியவாதி என்று சொல்லி இலக்கிய ரசனை சுத்தமாக இல்லாமல் ஆகிவிட்டாரே என்று வருந்தினேன்.
கிரியேட்டிவிட்டி அவர் மனதில் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது பற்றி கொஞ்சம் கவலையாய்தான் இருந்தது.
ஏன் ”விமலாதித்த மாமல்லன் அவர்கள்” கிரியேட்டிவிட்டி இல்லாமல் போனார்.
எப்போது அவர் கிரியேட்டிவிட்டி சுத்தமாக அழிந்தது.
கழிந்த ஒருவருடமாக அவர் ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ச்சியாக பல பதிவர்களை திட்டி திட்டி எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில்தான் அவர் கிரியேட்டிவிட்டியை இழக்கிறார்.
அது எப்படி ஒருவர் பலரை ஏதோ ஒரு காரணத்துக்காக திட்டும் போது கிரியேட்டிவிட்டி இழப்பார்.
இந்தக் கேள்வி நம் எல்லோருக்கும் இருக்கும்.
ஏனென்றால் “விமலாதித்த மாமல்லன் அவர்கள்” மனதுக்கு தன் பக்கம் ஞாயம் இல்லை என்பது நன்றாகத்தெரியும். தான் பெண்களைப் பற்றி அநாகரிமாக எழுதியது பற்றி அவருக்கு நன்றாகத்தெரியும்.
தன் மனதுக்கு தான் செய்த தவறு தெரியும் போது, அதுவும் பலர் முன்னிலையில் தெரியும் போது ஒரு மனிதன் மூன்று முடிவெடுப்பான்.
அந்த மூன்று முடிவுகள்
1.அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி இருந்துவிடுவான். அல்லது அந்த இடத்தை விட்டு ஒடிவிடுவான்.
2. உடனே தன் தவறை உணர்ந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்பான்.
3. தன் மீது தவறே இல்லை என்று சாதித்து எதிராளியை மேலும் தூற்றுவான். அநாகரிகமாக பேசுவான்.
// அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி ஒடிவிடுவான்//
என்று சொன்னேன் பாருங்கள்
அது எனக்கு ஒருமுறை நடந்தது. நான் அப்படி நடந்து கொண்டேன்.
ஒருமுறை லைப்ரரியில் நான்காவது மாடியில் இருந்து கீழே இறங்க லிப்டுக்கு ஒடிப்போகும் போது அங்கே லிப்ட் நின்று கொண்டிருந்தது.
உள்ளே மூன்று இளைஞர்கள் வெளியேயும் உள்ளேயுமாக நடந்து கொண்டிருந்தார்கள்.
நான் என்ன நினைத்துவிட்டேன். அவர்கள் நண்பர்கள்தாம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக லிப்டை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அவர்களை தவறாக நினைத்துவிட்டேன்.
உடனே கத்தினேன்” ஏன் லிஃப்ட நிறுத்தி வைச்சிருக்கீங்க நா போகனும்” என்றேன். அதற்கு அந்த இளைஞர்கள் பொறுமையாக “இல்லங்க லிஃப்ட் வேலை செய்யல போல, அதனாலத்தான் ஆப்பிரேட்டரத் தேடுறோம்” என்றார்கள்.
எனக்கு வெட்கமாகிவிட்டது. லிப்ட் பாக்கும் போது அங்கே ஆப்பிரேட்டர் இல்லை. ச்சே தப்பா நினைச்சிட்டோமே என்று வெட்கப்பட்டு அந்த இடத்தை விட்டு ஒடிவந்துவிட்டேன். அதாவது எனக்கு மன்னிப்பு கேட்கும் அளவுக்கு கூட முடியவில்லை. அவ்வளவு வெட்கமாகிப் போய்விட்டது.
நான் அப்படி ஒடிப்போன இடத்தில், என் இடத்தில் ”விமலாதித்த மாமல்லன் அவர்கள்” இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா? தான் தவறு செய்தது அப்பட்டமாக தெரிந்திருந்தாலும் அந்த மிகுதியான வெட்கத்தையும் அவமானத்தையும் மறைத்து மறுபடியும் லிப்டில் நிற்கும் இளைஞர்கள் மேலேயே பதிலைப் போட்டிருப்பார்
“ஏய் நீங்கதான் இந்த லிப்ட ஏதோ ஒடைச்சி வெச்சிருக்கீங்க”| என்று விதண்டாவாதம் பேசியிருப்பார்.
அதை அந்த இளைஞர்கள் சரி போகட்டும் என்று விட்டால் பரவாயில்லை.
ஆனால் இணையத்தில் “விமலாதித்த மாமல்லன் அவர்கள்” அப்படி திட்டிய இளைஞர்களோ மிகவும் திறமையானவர்கள்.
பதிலுக்கு அவரை வாங்கு வாங்கு என்று வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதை அவரால் சரியாக எதிர்க்க முடியவில்லை. பதட்டமாகிவிட்டார்.
இந்தக் கட்டத்தில்தான் அவர் பல பெண் எழுத்தாளர்களையும் அவமானப்படுத்தி எழுத ஆரம்பித்தார்.
இணையத்தில் பலர் மனதில் அவர் அற்பப் புழுவானார். மேலும் பதட்டமானார்.
கிரியேட்டிவிட்டி சுத்தமாக காலியானது.
ஏன் அவரால் எதிர்க்க முடியவில்லை.
“தன் நெஞ்சு அறிந்துதான் தவறு செய்திருக்கிறாரே” தன் மனதுக்கு நியாயம் இல்லாமல் தர்க்கமாக அவரால் போராட முடியவில்லை.
புலம்ப ஆரம்பித்தார்.
குறிப்பாக ஒரு வக்கீல் நண்பர் அவரிடம் தர்க்க ரீதியாக கேள்வி கேட்ட எந்தக் கேள்விக்கும் அவரால் பதில் சொல்லவே முடியவில்லை.
நான் சமுதாயத்துக்கு நல்லது செய்பவன் என்று சொல்லி எழுதி ஒடி ஒளிந்து கொண்டார்.
இது மாதிரி பல விஷயங்களில் ஒருவனின் மனது தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டு வருமாயின் அதில் கிரியேட்டிவிட்டி எங்கே இருந்து வரும்.
கிரியேட்டிவிட்டி இல்லாத மனம் அவருக்கே தெரிகிறது.
இருந்தாலும் தடத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்கும் போது அதை வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
எழுது கதைச்சுருக்கம் எழுது.
ஆனால் அதையும் சத்தே இல்லாமல் எழுதிவிட்டார்.
பார்ப்போம் அடுத்த ஐந்து வருடங்களுக்குள்ளாவது “விமலாதித்த மாமல்லன் அவர்கள்” ஃபேஸ்புக்கில் ஆரம்ப கட்டத்தில் எழுதும் ஒரு புதிய ஃபேஸ்புக் பதிவரை விட கிரியேட்டிவிட்டியாக எழுதுகிறாரா இல்லையா என்று பார்ப்போம்.
அவர் மனதில் நல்ல கிரியேட்டிவிட்டி ஊற்றெடுக்கட்டும்.

தங்கையும் குழந்தை... பிள்ளையும் குழந்தை...

குழந்தைகளை நாம் அதிகம் நேசிப்போம்.
ஆனால் நம்மைக் அதிகம் கஷ்டப்படுத்தும் போது சடாரென்று ஒரு கோபம் வரும்.
அந்த சமயத்தில் நாம் எப்படி நடந்து கொள்வோம் என்று பதிவு செய்யக் கூட முடியாதபடியான சமூகத்தின் நல்கண்கானிப்பில் இருக்கிறோம்.
சிறுவயதில் நானும் தம்பியும் ஒரு முறை அப்படி என் அத்தையை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தோம்.
அத்தை அரைத்த காய்ந்த மிளகாயை தூளை சிறுசிறு பாக்கெட்டுகளாக போட்டுக் கொண்டிருந்தார். நானும் தம்பியும் இங்கும் அங்கும் ஒடிக்கொண்டிருந்தோம்.
மிளகாய்ப் பொடி ஒருவேளை கால்பட்டு சிதறினால் அனைவருக்கும் கஷ்டம்.
அத்தை எங்களை எச்சரிக்கை செய்தார். திரும்ப திரும்ப கண்டித்தார்.
அடித்து எங்கள் சேட்டையை நிறுத்த வந்தார்.
நாங்கள் வீட்டுக்கு வெளியே ஒடிவிடுவோம். போய் ஹோய் ஹோய் என்று அழவம் காட்டுவோம். அத்தை வெளியே வந்து திட்டுவார். மறுபடி அத்தை அமர்ந்து பாக்கெட்டுகளை மெழுகுவர்த்தியில் ஒட்டும் போது போய் குறுக்க நெடுக்க ஒடுவோம்.
அப்படியே கடுப்பேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து அத்தை நறநறவென்று பல்லைக் கடித்துக் கொண்டு
“சனியன்களா கையில மாட்டுனீங்கன்னா பாருங்குல. அப்படியே இந்த வத்தல் பொடியை எடுத்து கண்ணுல தேய்ச்சி வெச்சிருவேன்” என்றார். அதைச் சொல்லும் போது அவர் கையில் ஒரு குத்து மிளகாய்ப் பொடி இருந்தது. நாங்கள் அப்போதும் வேடிக்கைக் அழவம் காட்டினோம்.
அடுத்து பத்து பதினைந்து நிமிடத்தில் அதை மறந்து ஒரு பாழும் கிணறு உண்டு அதனருகே விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த
சதுர வடிவத்திலான பாழுங்கிணற்றின் சுவரையும், பாத்ரூம் சுவரையும் இணைத்து அப்பா ஒரு தொட்டி கட்டியிருந்தார்.
நாகர்கோவில் ஒரு தண்ணீர் விளங்காத ஊர். அதிகம் தண்ணீர் தட்டுபாடுள்ள ஊர். குழாயில் நீர் வரும் போது அந்தத் தொட்டியில் நீர் ரொப்பி வைத்திருப்போம்.
அதனருகே விளையாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த அத்தை என்னைப் பிடித்துக் கொண்டார். தம்பி எலிக்குஞ்சு மாதிரி தெறித்து ஒடிவிட்டான்.
என்னை பிடித்த அத்தை சட்டென்று கையில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து என் வாயில் வைத்து விட்டார். கண்ணிலும் வைத்துவிட்டார்.
சொன்னபடியே செய்து விட்டார் அத்தை.
இப்போது என்னருகே கேமராவை வையுங்கள்.
எனக்கு நடக்கிறது என்றே தெரியவில்லை. ப்பூம் ப்பூம் என்று மூச்சை எப்படியோ விட்டேன். எரிச்சல் தாங்கவில்லை.
பக்கத்தில் இருந்த தொட்டி நீரை எடுத்து வாயைக் கொப்பளித்தேன். நீரை முகத்தில் அறைந்து கொண்டேன்.
அங்கே ஒரு சிக்கல் தொட்டியில் நீர் 80 சதவிகிதம் காலியாகி இருந்தது. அதில் கொசுக்களின் லாவாப் பருவ கூத்தாடிப்புழுக்கள் துடித்துக் கொண்டிருந்தன.
அதோடு சேர்த்து வேறு வழியில்லாமல் நீரைக் கொப்பளித்தேன்.
சில சமயம் பண்டு நமக்கு நடந்த துன்பத்தில் ஒரு செர்ரி பழமாக இன்னொரு துன்பம் இருந்தால் அதைச் சொல்ல நன்றாக இருக்கும்.
அது மாதிரி வாயில் வத்தல் பொடியோடு நான் கூத்தாடி புழுக்கள் நிறைந்த நீரால் வாய்க்கொப்பளித்தேன் என்று சொல்ல இனிமையாகத்தான் இருக்கிறது
.
நான் துன்பப்படுவதை தூங்கிக் கொண்டிருந்த அம்மா எழுந்து வந்து பார்த்துவிட்டார்.
அம்மாவும் பாவம் காலையில் இருந்து வேலை. மதியம் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் நானும் அத்தையும் சேர்ந்து ஒரு செண்டிமெண்ட் டிராமாவைப் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
அம்மாவுக்கு தாங்கமுடியவில்லை. அந்த வீட்டில் ஒரு பவளமல்லி மரம் உண்டு. காலையானால் வாசம் மூக்கில் ஏறும்.
அதனடியில் என்னையும் தம்பியையும் வைத்துக் கொண்டு வெகு நேரம் அம்மா அழுது கொண்டிருந்தார்.
அம்மாவைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. அப்பா வந்தார். அத்தையை திட்டினார். ஆனால் பெரிதாக ஒன்றும் திட்டவில்லை. பிற்பாடும் அப்பா இந்த சம்பவத்தைக் கேட்கும் போது ஒரு புன்சிரிப்போடு கடந்து விடுவார்.
கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட இருக்கும். அம்மா அந்த டாப்பிக்கை எடுத்தாலே ரெளத்திரமாகிக் கொதிக்கும் போது அப்பா அமைதியாகவே இருப்பார்.
செவ்வாய்க்கிழமை அப்பாவுக்கு கடை லீவென்றால் நாங்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்போம். அப்பாவை விட சிறந்த பொழுதுபோக்கு எங்களுக்கு கிடைக்காது. மகாபாரதம், ராமாயணம், ஆலிவர் கோல்டு ஸ்மித், சாமுவேல் ஜான்சன், அறிவியல், எரிமலை, வானம், சூரிய குடும்பம், அவரது சிறுவயது அனுபவங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
நம்மையும் பேச அனுமதிப்பார்.
மிகச்சிறுவயதிலேயே அப்பாவைப் பார்த்து நீஙகள் ஒரு முட்டாள். பத்தாம் பசலி என்றெல்லாம் நான் கத்தியிருக்கிறேன். அதற்கெல்லாம் கோபப்படவே மாட்டார்.
அப்படி அப்பாவுடன் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கும் போது அப்பா ஒருவிதமான நெகிழ்ச்சி மனநிலையில், என் கண்ணில் மிளகாய்ப் பொடியை தேய்த்த அத்தைப் பற்றி சொன்னார்.
“எனக்கும் அவளுக்கும் வயசு வித்தியாசம் அதிகம். நான் முதல் பையன். அதுக்கடுத்தது அஞ்சு பேர். அவ அறாவது பிள்ள. அவ பிறக்கும் போது நான் பெரிய பையன். நாலோ அஞ்சோ வயசுல அவளுக்கு அம்மை போட்டிருந்துச்சி. அப்படியே படுத்த படுக்கையா கிடந்தா.
நா நாகர்கோவில்ல இருந்து ஊருக்கு பாக்கப் போனேன். அப்ப கட்டில்ல சின்னப் பிள்ளையா படுத்திருந்தா. உடம்பு முழுசும் பொக்களம். வாயைத்திறக்க முடியாது. எல்லாரும் அவ செத்திருவான்னே பேசிகிட்டு இருந்தாங்க.
அப்ப அவ என்னப் பாத்து கண்ண கண்ண முழிச்சா ( என்று அது மாதிரி முழித்துக் காட்டினார்) அப்படியே எனக்கு கண்ணுல தண்ணி அருவி மாதிரி கட்டிப்போச்சு. ஓன்னு அழுதுட்டேன். அப்பா அழுதா எப்படி இருக்கும் தெரியுமா? வெடிச்சிருவேன்.யாராலும் சமாதானப்படுத்த முடியாது. அப்படி இருக்கும் போது எப்படியோ பிழைச்சா.
அவள நாங்க யாரும் எதுவும் சொல்றதில்ல. அவ உலகத்துக்கு மீண்டு வந்ததே பெரிய விஷயம். அதுல அவள என்ன கேக்குறது, திட்டுறது அப்படினே எனக்கு தோணும். ஏதோ சின்னப்பிள்ள ஒரு வயசுல தப்பு செய்வா. அப்புறம் திருந்திருவா என்ன. அப்பாவெல்லாம் அப்படித்தான் நினைச்சிகிடுவேன்பா.” என்றார்.
அப்பா இதைச் சொல்லி முடிக்கும் போது நான் நெகிழ்ந்து விட்டேன்.
என்னைப் போல அப்பாவுக்கு அத்தையும் ஒரு குழந்தையாகத்தான் இருந்திருக்கிறார். இருக்கிறார்.
தன் இரண்டு குழந்தைகள் சண்டை போடும் போது ஒரு அப்பா நிச்சயம் நியாயம் பேச மாட்டார்.
“ரெண்டு பேரும் சண்ட போடாம இருங்கப்பா” என்று அன்பாக கெஞ்சத்தான் செய்வார்.
ஒருவரிடம் அன்பும் வாஞ்சையும் சரியான நேரத்தில் சரியானபடி மனதில் விழுந்துவிட்டால் அதை எப்படி எதை வைத்து அழித்தாலும் அழியாது.
அது அழகான சுடராக ஒளிவிட்டுக் கொண்டுதான் இருக்கும்.
அப்படியான ஒரு அன்பும் வாஞ்சையும் அத்தையின் மேல் அப்பாவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
நெகிழ்ச்சியை விட அழகானது வாழ்க்கையில் எது சொல்லுங்கள்

எலுமிச்சை ஜூஸும் ஐந்து ரூபாயும்...

காய்ச்சல் அடிக்கிறதா இல்லையா என்று குழப்பும் காய்ச்சல் ஒன்று எனக்கு வரும்.
வழக்கமாக இந்த குளிர்(?) ஸீசனில் இருந்து வெயிலுக்கு மாறும் அந்த இடைப்பட்ட காலத்தில் அப்படி வரும் என்று நினைத்து வைத்திருக்கிறேன்.
வெளியே தொட்டுப் பார்த்தால் காய்ச்சல் இருக்காது. ஆனால் உள்ளுக்குள் வசதியில்லாமல் இருக்கும். இரவு அப்படி காய்ச்சல் வரும்போது தூக்கம் வராது.
உருண்டு கொண்டே இருப்பேன். எழுந்து ஒரு குரோசின் போட்டால் வேர்த்து நன்றாக தூக்கம் வரும்.
அப்படித்தான் அன்றொருநாள் ‘கனவு வாரியம்’ திரைப்படம் பார்ப்பதற்காக மனைவியிடம் சொல்லிவிட்டு மாயாஜாலை நோக்கி பயணம் செய்தேன்.
பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கும் போது ஒரு கைக்குழந்தையை படுத்தவாக்கில் அம்மா தூக்கிக் கொண்டு நடந்தார். பார்க்க அழகாய் இருந்தது.
ஒஹோ நாம கூட வாழ்க்கையில வானத்தைப் பார்த்துக் கொண்டே மட்டும் சில காலம் இருந்திருக்கிறோம் என்று நினைத்ததும் அது ஒரு ஆர்வமாக மாறியது.
கழுத்தை மேல்வாக்கி திருப்பி வானத்தைப் பார்த்தேன். இதோ இப்படித்தான் பார்த்துக் கொண்டே, வானத்தை, மேல் கூரையை பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன். மறுபடி பார்த்தேன்.இதோ இப்படித்தான். மேலேயேஏஏஏஏ பார்த்துக் கொண்டு மட்டும் சிலகாலம் இருந்திருக்கிறேன்.
மாயாஜால் ஸ்டாப்பில் இறங்கி தியேட்டர் நோக்கி நடக்கிறேன்.
நடக்கும் போதுதான் என்னுடைய காய்ச்சல் சோர்வு பற்றி நினைவு வந்தது. உள்ளே போய் படம் பார்க்கப் போகிறோம். குளிராக இருக்கும். இந்தக் வித்தியாசக் காய்ச்சலுக்கு தாங்குவோமா?
நடக்கவே சோர்வாக இருக்கிறது. எதற்கும் ஒரு குரோசின் போட்டு விடுவோமா. பாகெட்டை தொட்டுப் பார்த்தேன்.
சில சமயம் ஒரே ஒரு குரோசின் வைத்திருப்பேன். இல்லை. சரி எதாவது கடையில் வாங்கலாம் என்று திரும்ப தியேட்டரை விட்டு நடந்தேன்.
ஒண்றிரண்டு வெத்தலைப்பாக்குக் கடையில் கேட்டேன். இல்லை இல்லை என்றார்கள். இப்போதெல்லாம் குரோசின் வெத்தலைப்பாக்குக் கடையில் கிடைப்பதில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
முடிவில் ஒரு மெடிக்கல் கடையை கண்டுபிடித்து குரோசின் வாங்கினேன். விழுங்க வேண்டும். அதற்கு தண்ணீர் வேண்டும். வாட்டர் பாக்கெட் வாங்கலாமா என்று யோசித்தேன்.
அப்படியே நடந்து வரும் போது அந்த ஜூஸ் கடையைப் பார்த்தேன்.
எவர்சில்வர் பாத்திரங்களில் பாதாம்,ரோஸ்மில்க், ஆரஞ்ச், புரூட் மிக்சர், எலுமிச்சை ஜூஸ் என்று வைத்து விற்பார்களே அது மாதிரிக் கடை. ஒருகாலத்தில் இது போன்ற கடைகளில் புரூட் மிக்சர் வாங்கிக் குடிப்பேன்.
இங்கு ஆரஞ்சு ஜூஸ் வாங்கி, அதை வைத்துக் குரோசின் விழுங்கலாமா என்று நினைத்தேன். அப்படி நினைக்கும் போதே நீ முடிவில் புரூட் மிக்சர்தான் வாங்கப்போகிறாய் என்று இன்னொரு மனம் சொன்னது.
கடைக்குப் போனேன்.
“அண்ணே என்ன ஜூஸ் இருக்கு”
“ஆரஞ்சு... பாதாம்.. “ என்று சொன்னார்.
“லைம் குடுங்க”
“சரி”
“இல்ல இல்ல வேணாம் ஆரஞ்ச்”
“சரி”
“இல்ல ஆரஞ்ச் வேணாம். அதில்லாம புரூட் மிக்சர் இருக்கா”
”இருக்கு”
“அதையே குடுத்திருங்க”
வந்துவிட்டாயா உன் இச்சையை தணிப்பதாக நம்பும் புரூட் மிக்சருக்கு வந்துவிட்டாயா. நான் கண்டிரோலாக இருப்பேன் என்பதே தேவையில்லாத பாரம். தூக்கிப் போடு. வாழ்க்கையை அனுபவி. என்று குரல் கேட்டது.
”பாதாம் போடவா”
“ஆமா போட்ருங்க”
ஜூஸ் கடைக்காரர் கண்ணாடி கிளாஸை எடுத்து கால் பங்கு வெள்ளை பாதாம் பாலை ஊற்றி, அதன் உள்ளே ஆரஞ்சுக் கலர் புரூட் மிக்சரை ஊற்றிக் கொடுத்தார்.
வாங்கி ஒரு மடக்கு குடித்தேன். தரமான புரூட் மிக்சர்தான். இதை வைத்து குரோசின் சாப்பிடலாம்.
குரோசின் மாத்திரையை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு புரூட் மிக்சரைப் பருகினேன்.
அப்படியே விழுங்கும் போது இந்த குரோசின் புரூட் மிக்சருக்குள்ள விழுந்தரனுமாம். நான் விரல விட்டு கிண்டி கிண்டி என் குரோசின் என் குரோசின்னு தேடுவேனாம்.
ஆஹா இப்படி நடந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். எழுதுவதற்கு நன்றாக இருக்கும். ஆனால் நடக்க மாட்டேன் என்கிறதே என்று நினைக்கும் போதே குரோசினை விழுங்கியிருந்தேன்.
அதன் பிறகு புரூட் மிக்சரை நிதானமாக சுவைத்துக் குடித்தேன். நடுவில் கடைக்காரரை நோக்கி ஒரு புன்சிரிப்பு.
குடித்து முடித்தபிறகு கேட்டேன்.
“எவ்வளவுண்ணே”
“பதினைச்சி ரூபாய்”
இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். அதை வாங்கிக்கொள்ளும் போது
“புரூட் நல்லா இருந்திச்சிண்ணே”
“அப்படியா”
“எப்படி இனிமே வெயில் சீசன்ல வியாபாரம் நல்லா போகும் இல்ல”
“போகும்ன்னு நினைக்கிறேன் பாப்போம். நம்ம கடையில எல்லாமே நல்லா இருக்கும். நா கவனமா இருப்பேன். நல்லாயில்லாதத கொண்டு வர மாட்டேன்”
“ஒஹ்”
”பாருங்க லைம் ஜூஸ் எல்லாம் எசென்ஸ் இல்லாம ஒரிஜனல் லைம் ஜூஸ்.”
“ஒஹ் சூப்பர் நல்ல விஷயம்”
“நல்லாயிருக்கும். குடிச்சிப் பாக்குறீங்களா”
”இல்ல இல்ல வேணாம்”
“குடிங்க சும்மா. டேஸ்ட் பாருங்க”
“வேணாமுண்ணே”
“குடிங்க” என்று அன்போடு வற்புறுத்தி
ஒரு டம்ளரை எடுத்து பாதி அளவு எலுமிச்சை ஜூஸை ஊற்றிக்கொடுத்தார்.
நன்றாகவே இருந்தது. அதைப் பாராட்டினேன்.
கைகொடுத்து விடைபெற்றுக் கொண்டு மாயாஜாலை நோக்கி நடந்தேன்.
பரவாயில்லை மனிதர்கள் அன்பாகத்தான் இருக்கிறார்கள்.
கொஞ்சம் கனிவாக அவர்களை தொடர்பு கொண்டால் அப்படியே உருகிவிடுகிறார்கள். மற்றவர்களிடம் அன்பாக கனிவாக பழக வேண்டும் என்றும் ஒரு புரோகிராம் அவர்கள் மனதில் இருக்கிறது.
இந்த Rightness ஐதான் விவேகானத்தர் கடவுள் என்று சொல்லியிருக்கிறார். அதுக்கு முன்னாடியே புத்தர் சொல்லியிருக்கிறார்.
காரணகாரியமே இல்லாமல் சரியாக இருக்க வேண்டும்,
அன்பாக இருக்க வெண்டும், சக உயிர்களை நேசிக்க வேண்டும், கனிவு வேண்டும் என்னும் மனதை இன்னும் இன்னும் வளர்த்தெடுத்து ஒரு கனவு மனித சமுதாயத்தை அருளாளர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்.
அதேப் போன்று காரண காரியமே இல்லாமல் மனதில் தோன்றும் Wrongness பற்றியும் யோசித்து அதை நீக்க தீர்வு சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
ஆனால் Rightness ஐ அளவுக்கு அதிகமாக உற்றுப் பார்த்து, Wrongness ஐ அந்த அளவுக்கு உற்றுப் பார்க்காமல் போய்விட்டார்கள்.
Rightness வளர்ந்தாலே Wrongness போய்விடும் என்று நினைத்திருக்கிறார்கள்.
ஆனால் Wrongness இல்லாத எதுவும் Rightnessதான் என்ற ரூட்டில் போனால்தான் அது சரிவரும் என்று இலக்கியவாதிகள் நினைத்திருக்கலாம்.
Wrongness ஐ மேலும் மேலும் உற்றுப் பார்த்து, பக்கத்தில் சென்று பார்த்து, பிரித்து ஆராய்ந்து, பெரிதாக்கிப் பார்த்தாலே அது நம்மை விட்டு போய்விடும் என்ற ரீதியில் இலக்கியம் படைத்திருக்கலாம்.
Wrongness உற்றுப் பார்க்கும் போது அது மனதில் இருந்து போவதற்கு பதிலாக அதுவே ஒரு கொண்டாட்டமுறையாக, பெருமையாக படிந்துவிடும்
ஆபத்து பற்றியும் இலக்கியவாதிகள் அறியாமல் இல்லை.
தோழியைக் கேட்டால் “தினமும் பத்து நிமிடம் மெடிட்டேசன் செய். அப்புறம் நீ நல்லது கெட்டது அனைத்தையும் கடந்த மனப்பக்குவத்துக்கு வருவாய்” என்பார்.
நல்லது கெட்டதைக் கடந்து என்ன செய்ய? அது ஒரு வாழ்க்கை முறையா? வாழ்க்கையில் Routine ஐ கவனித்துக் கொண்டிருந்தாலே நல்லது கெட்டதை கடக்கும் மனப்பக்குவம் வந்துவிடும் போல.
ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து அன்றைய செய்தித்தாளில் என்ன செய்தி இருக்கும் என்று பார்க்காமலே எழுதிவிடுவது மாதிரியான Routine யில்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
இப்படி பலதும் நினைத்துக் கொண்டு தியேட்டரை அடைந்தேன். போன உடன் டாய்லட்டை நோக்கி ஒடினேன்.
சினிமா பார்க்கும் போது நிம்மதியாக பார்க்க வேண்டும்.
வாஷ் பேசனில் கைகழுவப் போகும்தான் நினைவுக்கு வந்தது.
“ஆமா கடைக்கார அண்ணன் நான் கொடுத்த 20 ரூபாயில் பதினைந்து ரூபாய் போக மிச்சம் 5 ருபாய் கொடுத்தாரா.
கொடுத்த ஞாபகம் இல்லையே.. கொடுத்திருப்பாரோ. எனக்கும் இது மாதிரி விஷயங்கள் மறந்துவிடும். கொடுக்கவில்லையோ, அல்லது அஞ்சு ரூபாய்க்குதான் எலுமிச்சை ஜூஸை ஊற்றிக் கொடுத்தாரோ. த்தா கடைக்காரன் ஏமாத்திட்டானோ நம்மள, மிச்சம் கொடுக்க வேண்டிய அஞ்சு ரூவாய்க்கு எலுமிச்சை ஜூஸ் உத்திக் கொடுத்திருக்கான். இல்லையே சில்லறை கொடுத்தானோ. இப்ப சினிமா விட்டுப் போகும் போது எலுமிச்சை ஜூஸ் குடிக்கிறேன் என்று சொன்னோமே, குடிக்கவா அல்லது அப்படியே ஒடிப்போயிடலாமா? கடைக்காரர் என்ன ஏமாத்திட்டாரா? இல்லையா? அல்லது எதுவும் பண்ணலையா? இப்படி இரண்டு நிமிடம் குழம்பினேன்.
சரி விடு என்று நினைத்துக் கொண்டு தியேட்டரை ஸ்கிரீனை நோக்கி நடந்தேன்.
நடக்கும்போது நான் ஏமாந்தேனா இல்லையா என்ற யதார்த்தம் புரியாமல் Wrongness, Rightness என்று நினைத்துக் கொண்டிருந்தது நினைத்து சிரிப்பு வந்தது.
டிக்கட் கிழிக்கும் இளைஞனைப் பார்த்து அந்த சிரிப்பை பிரதிபலித்தேன். 

தனியாக ஊர்சுற்றுங்கள்...

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தனியாக ஊர்சுற்றுவதை செய்து பாருங்கள்.
வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
வெளியூர் எங்கும் போக வேண்டாம். நீங்கள் இருக்கும் ஊரையே அப்படியே பராக்கு பார்த்துக் கொண்டு, பார்த்த உணவகங்களில் சாப்பிட்டுக் கொண்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்.
எனக்கெல்லாம் அது மிகப்பெரிய ஸ்டிரஸ் பஸ்டராக இருக்கும்.
தனியே ஒரு சினிமா பார்த்து, தனியே எங்காவது சாப்பிட்டு, தனியே வேடிக்கைப் பார்த்து, தனியே டீ சாப்பிட்டுக் கொண்டு, தனியே கண்ணில் பட்ட எதாவது பஸ்ஸில் ஏறி நகரத்தைச் சுற்றிக் கொண்டு, தனியே எதாவது லைப்ரரி சென்று புத்தகம் படித்துவிட்டு, கண்ணில் மாட்டியவர்களிடம் பேச்சுக் கொடுத்து விட்டு இருப்பது ஒரு சுகம்.
ஒருமுறை கோயம்பேடு பஸ்ஸடாண்டில் அமர்ந்து அங்குள்ள செக்ஸ் தொழிலாளர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் போவதே தெரியவில்லை.
எப்படி ஆண்கள் அவர்களை அணுகுகிறார்கள். பொது இடத்தில் அந்த அந்தரங்க ஒப்பந்தங்களை எப்படி குறுகிய நேரத்தில் நாசூக்காக செய்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்ததால் சுமார் மூன்று மணி நேரம் போவதே தெரியாமல் போனது.
சில சமயம் பாரீஸ் கார்னர் கடைவீதிகளுக்குப் போவேன். அங்குள்ள நெருக்கடியான பூக்கடை சந்தில் தொடங்கி ஒவ்வொரு சந்தாக போய்விட்டு வருவேன்.
எலக்டிரானிக்ஸ் பொருட்கள் விற்கும் இடமான ரிச்சி ஸ்டிரீட்டும் எனக்குப் பிடிக்கும்.
நான் மதிய உணவு எங்கே சாப்பிடப் போகிறேன் என்று எனக்கே தெரியாத அந்த சஸ்பென்ஸ் எனக்குப் பிடிக்கும்.
சில சமயம் வண்டிகடைகள், சில சமயம் பெரிய உணவகங்கள்.
ஒருமுறை ஒரு டாஸ்மாக் கடை முன்னே நின்று கொண்டு அங்கே சைட் டிஷ் விற்கும் பாட்டி என்ன என்னல்லாம் பொருட்கள் வைத்திருக்கிறார் என்று பார்த்தேன்.
நெல்லிக்காய், சீனிக்கிழங்கு, மாங்காய், பெரிய எலந்தப்பழம் என்று அவர் வைத்திருந்த அனைத்துப் பொருட்களையும் மனப்பாடம் செய்துவிட்டுதான் அந்த இடத்தை விட்டு சென்றேன். சுமார் இரண்டு மணி நேரம் அதில் போயிருந்தது.
புரசைவாக்கம் ஒட்டேரி பிரிக்கிளின் ரோட்டில் நடப்பது எனக்குப் பிடித்த பொழுது போக்கும்.பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களின் நெருக்கடியான வாழ்க்கைப் போராட்டத்தை அங்கே கண்கூடாகப் பார்க்கலாம்.
ஒரு பொதுக்கழிப்படமருகே அமர்ந்து ஒரு பெண் திருப்தியாக அன்றைய காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.
பெண் உடல் ஆண் உடல் மறைப்பது மிகப்பெரிய கவனமாக அங்கே நடக்காது. ரோட்டுப் பக்கத்திலேயே துணி துவைத்துக் கொண்டிருப்பார்கள்.
இரண்டு (இடு)சுடுகாடுகள் இருக்கும்.
மக்கள் அருவருப்பாக பயந்து ஒதுங்கும் சாவு மலர்களை ஆடுகள் விருப்பமாய் உண்டு கொண்டிருக்கும்.
அந்த இடத்துக்கு சம்பந்தமில்லாமல் பெரிய கிறிஸ்தவ வழிபாட்டுக் கூடமிருக்கும்.அங்குள்ள மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் வருவதற்கு முன்னால் அவர்கள் அனைவரையும் இயேசுவின் சொர்க்கத்துக்கு கூட்டிச் சென்றுவிட வேண்டும் என்பது அவர்கள் உயர்ந்த(?) நோக்கமாக இருக்கும் என்பது படியான கட்டிடம் அது.
அந்த மூன்று கிலோமீட்டர்களுக்குள் மூன்று கிறிஸ்தவ சிறுகோவில்கள், ஏழு இந்து சிறுகோவில்கள் இருக்கும்.
சில சமயம் திநகர் சென்று வேடிக்கைப் பார்ப்பேன். மக்கள் கண்கள் விரிய விரிய பர்சேஸ் செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
சமீபத்தில் அங்குள்ள தேங்காய் தவினை வாங்கி சாப்பிட்டேன். ருசிதான்.
சென்னை வந்ததில் இருந்து அதைப் பார்த்து வருகிறேன். அது ஊசி போட்டு தேங்காயில் அப்படி தவினை வரவைப்பார்கள் என்று யாரோ சொல்ல, அது என் மனதில் இறங்கி விட்டது. அதனாலேயே சென்னை வந்ததில் இருந்து இருபது வருடங்களாக அதைப் பார்த்தாலும் வாங்கித் தின்பதில்லை. சமீபத்தில் “போங்கடா நீங்களும் உங்க ஆர்கானிக் பிரச்சாரம் மொக்கைகளும்” என்று வாங்கி சாப்பிட்டேன். செம ருசி.
இப்போது செல்போன் வந்து விட்டது. நடுவில் நண்பர்களிடத்தில் இருந்தோ அல்லது நாமோ போன் செய்து பேசிவிடுவோம்.
செல்போன் இல்லாத சமயத்தில் இப்படி தனியே சுற்றும் போது செமையாக இருக்கும்.
காலை எட்டரை மணிக்கு வெளியே கிளம்ப்பும் நாம் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பும் வரை அமைதியாக இருப்போம். அதுவே பெரிய தியானம்தானே.
சில சமயம் நாமே நமக்குள் வாயால் முணுமுணுத்துக் கொள்ளும் அழகும் நடக்கும். நான் பாலிடெக்னிக் படிக்கும் போது தெருவில் இன்னொரு பையன் வேறு ஒரு பாலிடெக்னிக்கில் படித்தான்.
அவர் ”த்தா ம்மாள டைப்”.
எப்போதும் கெட்ட வார்த்தைப் போட்டுக் கொண்டு ப்ளிச் ப்ளிச் என்று துப்பிக் கொண்டு இருப்பான்.
தெரு முனையில் நின்று சில நேரம் என்னிடம் பேசுவான்.
ஒருநாள் காலை நான் ரெட்டையேரி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். அவனும் வந்தான். காலேஜ் போற போல என்றேன்.
அவன் நான் காலேஜ் போகல மச்சி வண்டலூர் சூ போறேன் நீ வறியா என்றான்.
நானும் பார்த்தேன். எனக்கு நிறைய அட்டெண்டன்ஸ் இருந்தது. அடுத்து எனக்கு எப்பவுமே ஒழுக்கத்தில் நம்பிக்கை கிடையாது.
சரி போவோம் என்று அவனுடன் வண்டலூர் சூ சென்றேன்.
அவன் கல்லூரிக்குச் செல்லாமல் அடிக்கடி அங்கு செல்வேன் என்று சொன்னான். நான் கேட்டு வைத்துக் கொண்டேன்.
சூ உள்ளே சென்றதும் குழந்தை மாதிரி ஆகிப்போனான் அந்த “த்தா ம்மாள” நண்பன்.
அதிலும் பறவைகளை துள்ளிக் குதித்து ரசித்தான்.
சிறுகுழந்தையாகவே ஆகி “மச்சி அங்கப் பாரேன் பாரேன்” என்றான். எனக்கோ அவன் அப்படி சிலிர்ப்பது வெட்கமாய் இருந்தது. சரி சரி என்று கேட்டு வைத்துக் கொண்டேன். வேடிக்கைப் பார்ப்பது அவனை அப்படி மாற்றியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
பிற்பாடு நான் ஹைதிராபாத்தில் வேலை பார்க்கும் போது அவன் வாழ்க்கை நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து விட்டதாக செய்தி வந்தது. ஒரு விநாடி அவன் வண்டலூர் சூவில் துள்ளிக் குதித்தது ஞாபகம் வந்தது.
செத்துத் தொலைடா என்று வேலையைப் பார்க்க ஆபீஸ் போய்விட்டேன்.
எங்கோ போகிறேன் டாப்பிக்கை விட்டு.
வேடிக்கை பார்க்க என்றே ஒருநாளை ஒதுக்குங்கள் என்று சொல்ல வருகிறேன்.
அன்று யாரையும் சேர்காதீர்கள். தனியாக வேடிக்கை பாருங்கள்.
அது உங்களுக்கு சொல்ல முடியாத ரிலாக்சைக் கொடுக்கும். அது மிகச்சிறந்த மெடிட்டேசன்.
அதிலும் ரொட்டீனாக வேடிக்கைப் பார்க்காதீர்கள்.
உங்கள் புரோகிராம் என்னவென்று உங்களுக்கே தெரியக்கூடாது.
பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு ஸ்டாப்பில் ஒரு போஸ்டரைப் பாக்கிறீர்கள். ஏதோ ஒரு கண்காட்சி அந்த இடத்தில் நடக்கிறது என்று போஸ்டரைப் பாக்கிறீர்கள்.
டபகென்று அங்கே குதித்து விட வேண்டும். அந்தக் கண்காட்சிக்கு போக நடக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டிருக்கும் போதே அங்கே ஒரு தியேட்டர் வருகிறது. கண்காட்சியை விட்டு படம் பார்க்கலாம் என்று மனம் சொல்லும். உடனே படத்துக்குள் போய் விட வேண்டும்.
படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே போரடிக்கிறது. கொடுத்தக் காசுக்காக அங்கேயே இருந்து கொண்டிருக்க வேண்டியதில்லை.
அங்கிருந்து வெளியேறலாம்.
அங்குள்ள மக்கள் யாரிடமாவது இங்க நல்ல சாப்பாடு எங்க கிடைக்கும், நல்ல டீ எங்க கிடைக்கும், நல்ல கேக், பன் பட்டர் ஜாம் எங்கே இருக்கும் என்று கேட்கலாம். அவர்கள் உதவுவார்கள். போய் தின்ன வேண்டும்.
இப்படி ஒருநாள் செய்தால் உங்கள் உடலும் மனதும் சொல்ல முடியாத புத்துணர்ச்சி பெரும்.
பெண்களும் இதைச் செய்ய வேண்டும். இந்த ”ளும்” என்பது பொதுவெளி எங்களுக்கானதில்லை என்று சலித்து ஒதுங்கும் பெண்களுக்காக பொதுஜனம் பார்க்கிறது என்பெதெல்லாம் ஒரு பேச்சில்லை.
முயன்றால் முடியாதது இல்லை.
இப்படியெல்லாம் செய்யும் பட்சத்தில் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சமீபத்தில் ஏதோ திரைப்படம் பார்த்தேன்.
அதில் இந்த வாழ்க்கைதான் சொர்க்கம் என்று ஹீரோ சொல்வான். அப்படித்தான் நாமும் நம்ப வேண்டும்.
அந்த சொர்க்கத்தில் அந்த அந்த விநாடி வாழ வேண்டுமென்றால் இந்த திடீர் ஊர் சுற்றுதல் பழக்கம் நல்லதொரு பிடிப்பைக் கொடுக்கும்.
தினமும் காலையில் தின்று, ஆபீஸ் சென்று, அல்லது குடும்பத்தோடு இருந்து சிரித்து, மாலை டீக் குடித்து, இரவானால் உடலுறவு கொண்டு தூங்கும் ரொட்டீனை விட்டு
ஒருநாள் வெளியே வந்தால் அது கொடுக்கும் புத்துணர்வே தனிதான்.
மனமிருந்தால் உள்ளூரிலேயே மகிழ்ச்சியாக இருக்கலாம் 

புத்தகக் காதல்....

வெள்ளி சிறுவர்மலர் வரும்.
அதை முதலில் படிக்கும் உரிமை எனக்கு.
ஞாயிறு வாரமலர் வரும். அதை முதலில் படிக்கும் உரிமை பெரிய அண்ணனுக்கு.
சனிக்கிழமையும் ஒரு மலர் வரும். அதன் பெயர் கதைமலர். அதை முதலில் படிக்கும் உரிமை சின்ன அண்ணனுக்கு.
அதாவது சிறுகதைகளுக்காக ஒரு இதழ் வந்தது.
ஆர்னிகா நாசர், சாரு நிவேதிதா, அய்கண், மகரிஷி மாதிரி எழுத்தாளர்கள் எல்லாம் எனக்கு அப்படித்தான் தெரியும்.
அந்த கதைமலரை இரண்டாவதாகப் படிக்கும் முன்னுரிமை எனக்குக் கிடைத்திருந்தது.
ஒருநாளில் எல்லாக் கதைகளையும் படித்து முடித்துவிடுவேன்.
ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போ படித்த ஞாபகம். வெகுசன இதழ்களின் சிறுகதைகள் அனைத்தும் உள்ளேப் போய்விடும். சரி இது தற்புகழ்ச்சி. அது கிடக்கட்டும்.
அந்தக் கதைமலரில் ஒரு கதைப் படித்தேன்.
அது என்னை மிகவும் பாதித்தது. கதை என்ன?
அதாவது ஒரு வயதான அப்பாவுக்கு படிக்கும் பழக்கம் உண்டு. நிறைய புத்தகம் படிப்பவர். அவர் கண்ணாடி உடையவே மகனிடம் இன்னொரு மூக்குக்கண்ணாடி கேட்பார். மகனுக்கோ பெரிய வேலை வருமானமில்லை. ஆகையால் இன்னைக்கு நாளைக்கு என்று மூன்று மாதங்கள் இழுத்து விடுகிறான்.
அதன் பிறகு கஷ்டப்பட்டு அப்பாவுக்கு மூக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுக்கிறான். அப்பா அதை வாங்கி போட்டுக் கொள்ளும் போது அவர் பேரன் ஒடி வந்து கண்ணாடியைத் தட்டி கண்ணாடி உடைந்து போகிறது. அதோடு கதை முடிந்துவிடும்.
இது ஒரு சாதரணக் கதையாகத் தெரியலாம். ஆனால் அந்த வயதில் எனக்கு அது மிக நெகிழ்ச்சியான கதை. அந்த வயதானப் பெரியவரின் நிலையை நினைத்து நினைத்து கவலை கொள்வேன்.
ச்சே அது உடையும்போது அவருக்கு எப்படி இருந்திருக்கும். இப்படியெல்லாம் தோன்றும்.
அதாவது ”மூக்குக் கண்ணாடியின்மை” வாசிப்பதை தடையும் செய்யும் பொருளாக ஆகிப் போகும் போது ஏற்படுத்தும் பதட்டம் கொடுமையானது.
அம்பேத்கருக்கு அப்படி ஒரு நிலமை ஏற்படுகிறது. 1933 ஆம் வருடம் சமயத்தில் அவர் இந்தியாவுக்கும் லண்டனுக்கும் அடிக்கடி அலைகிறார்.
இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. கண்பார்வை மங்குகிறது. இந்தக் கண்பார்வை மங்குவது பற்றி அம்பேத்கர் அதிகம் வருத்தப்படுகிறார்.
புத்தகங்கள் மீது அம்பேத்கர் கொண்டுள்ள காதல் அப்படி.
1.வெளிநாட்டில் படித்து விட்டு அம்பேத்கர் கப்பலில் வரும் போது மொத்தம் 24 பெட்டிகளில் அவருடைய புத்தககங்களை எடுத்து வந்தாராம்.
2.லண்டனுக்கு பேச்சுவார்த்தை நடத்தப் போனாலும் இந்தியாவில் இருக்கும் நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் “என் புத்தகங்களை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கடிதத்தில் எழுதுகிறார்.
3.தாழ்த்திவைக்கப்பட்ட மாணவர்கள் விடுதியில் சென்று உரையாற்றும் போது ”கல்வி கற்கும் போது பல்தரப்பட்ட புத்தகங்களை திரும்ப திரும்ப சேகரித்துக் கொண்டே இருங்கள். நீங்கள் குறிப்பிட்ட அறிவை பெறுவரையில் படிக்கும் போது எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளத்தேவையில்லை. அறிவை வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புத்தகங்கள தொடர்ச்சியாக வாசியுங்கள்” என்கிறார்.
4.இன்னொரு கல்லூரி உரையில் “ என் வாழ்க்கையின் லட்சியமே ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கிப் படித்து பேராசிரியராகி வாழ்நாள் முழுவதும் ஒரு மாணவனாக கற்க விரும்பினேன். ஆனால் சமூகவிஷயங்கள் என்னை போராட்டக்காரனாக்கி விட்டது. புத்தகங்கள் வாசிப்பது மட்டும் எனக்கு போதும்” என்கிறார்.
5.பிற்காலத்தில் ”ராஜ்கிரகா” என்றொரு நூலகத்தை பார்த்து பார்த்து கட்டி, புத்தகங்களை அடுக்கி, புத்தகங்கள் மீது காதல் கொண்டுள்ளார்.
6.ஒருமுறை கப்பலில் லண்டன் செல்லும் போது அவரது கால்வலி காரணமாக கப்பலில் உலாத்தவே முடியத நிலையில் இருக்கிறார். இருந்தும் அவர் கவலைப்படவில்லை. புத்தகங்கள் படித்தே பல நாட்களைக்
போக்கிவிடுகிறார்.
7. நான் சுவாரஸ்யமானவனோ, எளிதில் நட்பு கொள்பவனோ கிடையாது. புத்தகம் வாசித்துக் கொண்டே அது பற்றி யோசித்துக் கொண்டிருப்பதால் என் முகம் சிடுசிடுபாகவே இருக்கும் என்றொரு உரையில் பேசியிருக்கிறார்.
இந்த அளவுக்கு புத்தகங்களை நேசிக்கும் ஒரு மனிதருக்கு கண்பார்வை மங்கினால் எப்படி மனம் பதைபதைக்கும்.
வேறு ஒரு கண்ணாடி மாற்றுகிறார். அதுவும் கொஞ்சநாளில் ஏமாற்றிவிட, இன்னொரு மூக்குக்கண்ணாடியை கேட்டு அணிந்திருக்கிறார். இது பரவாயில்லை.
இது மாதிரியான குழப்பம் வரும் போது அம்பேத்கருக்கு ஒரு பயம் வருகிறது. கால்வலி கைவலி போன்ற உடல்ப் பிரச்சனைகளை அவர் கண்டுகொள்வதில்லை. ஆனால்
தன் கண்பார்வையில் பிரச்சனை என்று வரும் போது அவர் அதிகம் கலங்குகிறார்.
வயதானக் காலத்தில் எனக்கு கண்பார்வையில் பிரச்சனை வந்துவிடுமோ என்று கலங்கி ஒருநாள் தேம்பி தேம்பி அழுதிருக்கிறார்.
பெரிய பெரிய பிரச்சனைகளையெல்லாம் நெஞ்சுரம் கொண்டு தைரியமாக எதிர்கொண்டவரால்,
புத்தகம் வாசிக்க முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தைக் கூட தாங்க முடியாமல் அழுதிருக்கிறார் என்றால் அவர் புத்தகங்களை எவ்வளவு நேசித்திருப்பார் பாருங்கள்.
அம்பேத்கர் ஏன் புத்தகத்தை அவ்வளவு நேசித்தார்? ஏன் அப்படி ஒரு வெறி?
அந்த புத்தக நேசம்தான்
ஒரு சமத்துவமான கருத்துத்தளத்தை ஏற்படுத்தி,
இப்போதைய இந்தியாவை கொஞ்சமாவது ஒற்றுமையாக வைத்திருக்கிறது என்று நினைத்து பாருங்கள்.
அவர் அழுகையைப் புரிந்து கொள்வீர்கள்.